ஒண்டிவீரன் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு- கனிமொழி எம்.பி. மரியாதை
நெல்லையில் அரசு சார்பில் ஒண்டிவீரன் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லையில் அரசு சார்பில் ஒண்டிவீரன் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சபாநாயகர் அப்பாவு
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன், கனிமொழி எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், கலெக்டர் கார்த்திகேயன், மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், சுப.சீதாராமன், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அவரை எப்போதும் நினைவுகூரும் வகையில் மணிமண்டபம் அமைக்க கருணாநிதி உத்தரவிட்டார். அவர் சார்ந்த மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தார். அவருடைய வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்'' என்றார்.
அ.ம.மு.க.-ம.தி.மு.க.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் நெல்லை பரமசிவன், ஆவின் அண்ணாசாமி, பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
ம.தி.மு.க.வினர் துணை செயலாளர் மணப்படை மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ் சிறுத்தைகள் கட்சியினர் தலைவர் அகத்தியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொதுச்செயலாளர் செந்தில், மாநில செயலாளர் ஆறுமுகம், மகளிர் அணி செயலாளர் அம்சவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-தே.மு.தி.க.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஆதித்தமிழர் பேரவையினர் தலைவர் அதியமான் தலைமையில் பாளையங்கோட்டையில் இருந்து ஊர்வலமாக மணிமண்டபத்திற்கு வந்து ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதி தமிழர் கட்சி
ஆதி தமிழர் கட்சியினர் தலைவர் ஜக்கையன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ் புலிகள் கட்சியினர் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொதுச்செயலாளர் பெருகிவாலன், மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நிறுவன தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திராவிட தமிழர் கட்சியினர் தலைவர் வெண்மணி தலைமையில் மாலை அனைத்து மரியாதை செலுத்தினார்கள். பொதுச்செயலாளர் கதிரவன், மகளிர் அணி செயலாளர் மீனா, மாவட்ட செயலாளர் திருக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அருந்ததியர் சங்கம்
தமிழ்நாடு அருந்ததியர் சங்கத்தினர் மாநில தலைவர் மாங்கனி முருகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு திரளாக வந்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில், துணை போலீஸ் கமிஷனர்கள் அனிதா, சரவணகுமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சாலைமறியல்
முன்னதாக அந்த வழியாக சென்ற காரை சிலர் தட்டியதாக கூறி, அங்கிருந்த ஆதி தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிதமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பிடித்து சென்ற 2 பேரையும் விடுவித்தனர். தொடர்ந்து மறியலை கைவிட்ட ஆதி தமிழர் கட்சியினர் கலைந்து சென்றனர்.