சுற்றுலா வந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
ஊட்டிக்கு சுற்றுலா வந்த பெண் அவினாசி அருகே ஓட்டல் முன்பு சாப்பிட காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து அந்த பெண்ணின் 4 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.
அவினாசி
ஊட்டிக்கு சுற்றுலா வந்த பெண் அவினாசி அருகே ஓட்டல் முன்பு சாப்பிட காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து அந்த பெண்ணின் 4 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுற்றுலா
காஞ்சீபுரம் தமிழரசு நகரைச் சேர்ந்தவர் அரசு (வயது 56). இவர் தனது மனைவி தாமரைச்செல்வி (51) மற்றும் குடும்பத்தினருடன் காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். வழியில் நேற்று முன் தினம் இரவு அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் வந்தபோது அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தினர். அப்போது வேனில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர்.
தாமரைச்செல்வியும் வேனை விட்டு கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 ஆசாமிகள் தாமரைச்செல்வியின் அருகில் நின்றனர். அதில் பின்னால் அமர்ந்திருந்தவன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி தாமரைச்செல்வியிடம் முகவரி விசாரிப்பதுபோல் பேச்சு கொடுத்தான்.
நகை பறிப்பு
பின்னர் அந்த ஆசாமி திடீரென்று தாமரைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தான். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் தாமரைச்செல்வி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.