ஆந்திராவுக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தல் :2 பேர் கைது
புதுச்சேரியில் இருந்து கிளியனூர் வழியாக ஆந்திராவுக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிளியனூர்,
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏட்டுகள் நாகராஜ், புஷ்பராஜ், சுரேஷ், விஜயமாறன் ஆகியோர் நேற்று கிளியனூர் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரினுள் 43 அட்டைப்பெட்டிகளில் 1,452 மதுபாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
உடனே காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் அக்காய்பள்ளி பகுதியை சேர்ந்த கோமளராமோகன் (வயது 45), உட்டுக்குர் சின்த்தா கோமடைன் பகுதியை சேர்ந்த நித்தியமல்லேஸ்வரராவ் (38) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு மதுபாட்டில்கள், சாராயத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கோமளராமோகன், நித்தியமல்லேஸ்வரராவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.