லாரியில் 'லிப்ட்' கேட்டு கஞ்சா கடத்தல்; வாலிபர் கைது
லாரியில் லிப்ட் கேட்டு பயணம் செய்த வாலிபர் கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சிறப்பு சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட தனிப்படை போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரியில் லிப்ட் கேட்டு பயணம் செய்த தடாவை சேர்ந்த வாலிபர் ராமமூர்த்தி (வயது 22) என்பவர் 21 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ராமமூர்த்தியை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மற்றொரு சம்பவத்தில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் திருத்தணி-சித்தூர் சாலை பெட்ரோல் நிலையம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் கஞ்சா கடத்திய வாலிபர் திருத்தணி வள்ளிநகரை சேர்ந்த பரத்ராஜ் (19) என தெரிய வந்தது. பின் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.