பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்


பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
x

திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் வகுப்பறைகள்

திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, உலகரட்சகர் மேல்நிலைப்பள்ளி, சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, பெட்டைக்குளம் காதர் மீராசாகிபு மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் வகுப்பறைகள்) தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆக்சிஜன் வசதி

தொடர்ந்து நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் செலவில் கட்டப்பட உள்ள காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றாா். நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் வரவேற்று பேசினார். இதில் ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ் விமலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இலவச சைக்கிள்

முன்னதாக காவல்கிணறு திருஇருதய மேல்நிலைப்பள்ளியில், புதிதாக கட்டப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. காவல்கிணறு பங்கு தந்தை ஆரோக்கிய ராஜ் தலைமையில், உதவி பங்கு தந்தை வினோத் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை வென்சி நன்றி கூறினார்.


Next Story