ராதாபுரம் தொகுதியில் ஒரு மாதத்துக்குள் மேலும் 134 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்; சபாநாயகர் அப்பாவு தகவல்
ராதாபுரம் தொகுதியில் ஒரு மாதத்துக்குள் மேலும் 134 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வள்ளியூர்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், புதுடெல்லியை போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை அமைக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு சபாநாயகர் அப்பாவு ஏற்பாடு செய்துள்ளார். ராதாபுரம் தொகுதியில் உள்ள 294 பள்ளிகளில் மொத்தம் ரூ.5.88 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகிறது.
இதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மற்றும் அரசு பொது நிறுவனங்களின் நிதிகளை பெற்று 160 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான இணையதள வசதியுடன் உயர்தர தொடுதிரை அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 134 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஸ்மார்ட் வகுப்புகளை தொடர்ந்து தொடங்கி வைப்பதுடன் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் கல்வி பயிலும் முறை மற்றும் ஸ்மார்ட் வகுப்பு பயன்பாடு குறித்தும் சபாநாயகர் கண்காணித்து வருகிறார்.