அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை


அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே சமையல் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே சமையல் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அரசு பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே கருக்கனஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 113 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்கள் அமர இட நெருக்கடியாக உள்ளது. மேலும் இங்கு மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவு பள்ளிக்கு வெளியில் திறந்தவெளியில் சாலை ஓரத்தில் சமைத்து சுகாதாரமற்ற முறையில் வழங்குவதாக புகார் எழுந்தது.

இதனால் மாணவர்கள் வாந்தி, மயக்கம், பேதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராமமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் மருத்துவமனைகளுக்கு செல்ல விடுமுறை எடுத்து வந்தனர்.

பள்ளி முற்றுகை

இந்தநிலையில் சத்துணவு கூடம் கட்டி மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் மதிய உணவு வழங்க வேண்டும். பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு அலுவலர்கள் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சமையல் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள்பள்ளிக்கு சென்றனர்.


Next Story