திருமங்கலத்தில் கறிவிருந்தில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது
திருமங்கலத்தில் நடைபெற்ற கறி விருந்தில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் நடைபெற்ற கறி விருந்தில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கறி விருந்து
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனசேகரன். இவர் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி கறி விருந்து வைத்துள்ளார்.
இதையொட்டி அவரது நண்பர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். கறிவிருந்தில் மதுரை கீழபனங்காடியை சேர்ந்த வேதகிரி (வயது41) மற்றும் அ.தொட்டியபட்டியைச் சேர்ந்த கணபதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில் சிலர் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வேதகிரி, காரில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்துவந்து சுட்டு, மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்த திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கைது
துப்பாக்கியால் சுட்டு மிரட்டிவிட்டு தப்பிய வேதகிரியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரையில் அவரை நள்ளிரவில் கைது செய்து திருமங்கலம் அழைத்து வந்தனர்.
வேதகிரி வக்கீலாகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருப்பதாக தெரியவந்தது.
தனசேகரன் கிடாய் விருந்துக்கு தன்னை அழைத்து இருந்தார். அங்கு சென்ற போது, கணபதி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே துப்பாக்கியை வைத்து தரையை நோக்கி சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி வந்ததாக வாக்குமூலத்தில் வேதகிரி கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வேதகிரி மீது ஆயுதத்தை காட்டி மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.