தேர்தல் காரணமாக கடைகள் அடைப்பு


தேர்தல் காரணமாக கடைகள் அடைப்பு
x

ஈரோட்டில் நேற்று தேர்தலையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

ஈரோடு

ஈரோட்டில் நேற்று தேர்தலையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வாகன நெரிசல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஈரோட்டுக்கு வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் வரத்தொடங்கின. இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரிவரை உள்ள அனைத்து மாவட்டங்களின் பதிவு எண்களிலும் வாகனங்கள் ஓடின. காலை முதல் நள்ளிரவு வரை ஈரோடு சாலைகள் போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கியது.

சிரமமான சூழல்

தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த 25-ந் தேதிக்கும் ஒரு வாரத்துக்கு முன்பே ஈரோடு சாலைகள் வழியாக எங்கு வந்தாலும் சிக்கி சின்னாபின்னாமாகி விடுவோம் என்று அச்சத்திலேயே மக்கள் இருந்தனர். கடைசி 3 நாட்கள் சாலையில் வாகனம் ஓட்டிச்சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என்று அனைத்து பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகினார்கள். ஆம்புலன்சு வாகனங்கள் செல்வதற்கு கூட மிகவும் சிரமமான சூழல் இருந்தது.

25-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியூரை சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அன்றைய தினம் இரவுக்குள்ளாக வாகனங்கள் வெளியேறின. இதனால் நேற்று முன்தினம் பொதுமக்கள் வாகன நெரிசலில் இருந்து மீண்டு பெருமூச்சு விட்டனர்.

கடைகள் அடைப்பு

இந்தநிலையில் நேற்று தேர்தல் நடந்ததையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள கனிமார்க்கெட், ஜவுளி கடைகள், வ.உசி.பூங்கா நேதாஜி காய்கறி சந்தை, கடைவீதியில் இருக்கும் கடைகள், பெரிய நிறுவனங்கள், பர்னிச்சர்கள், ஜூவல்லரிகள், ஹார்டுவேர் கடைகள் என்று அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதே நேரத்தில் சில ஓட்டல்கள், மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் மட்டும் திறந்து இருந்தன. சிலஇடங்களில் டீக்கடைகளும், பேக்கரிகளும் செயல்பட்டன. வாக்குச்சாவடி மையங்களை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வாகன நெரிசல் இருந்தது.

15 முதல் 20 நாட்களுக்கு மேல் வாகன நெரிசலில் சிக்கித்தவித்த மக்கள் நேற்று ஈரோடு சாலைகளில் நிம்மதியாக வாகனங்களை ஓட்டிச்சென்றதை காணமுடிந்தது.


Related Tags :
Next Story