வீட்டுச்சுவர் இடிந்து மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம்
போச்சம்பள்ளி பகுதியில் பெய்த கனமழைக்கு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்தூர்*
போச்சம்பள்ளி பகுதியில் பெய்த கனமழைக்கு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வீடு இடிந்து விழுந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சங்கரும், அவரது மனைவியும் புதுவீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.மற்றொரு வீட்டில், சங்கரின் தாயார் சகுந்தலா (60), மகள் நந்தினி (16), மகன் நித்திஷ் (13) ஆகியோர் தூங்கி கொண்டு இருந்தனர். இவர்களில் நந்தினி 11-ம் வகுப்பும், நித்திஷ் 7-ம் வகுப்பும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.
3 பேர் காயம்
இந்த நிலையில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு சகுந்தலா மற்றும் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு சங்கர் மற்றும் அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.