''செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை பாரபட்சமானது''
''செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை பாரபட்சமானது'' திருநாவுக்கரசர் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது பாரபட்சமானது. பா.ஜ.க. அரசின் மோசமான நடவடிக்கை. ஊழல்கள் தடுக்கப்பட வேண்டியதில் பாரபட்சமில்லை. பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்கள் அல்லது பா.ஜ.க.வுக்கு சாதகமான கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?. காங்கிரஸ் ஆட்சி செய்கிற மற்றும் காங்கிரசுக்கு துணையாக இருக்கிற தி.மு.க. போன்ற தோழமை கட்சிகள் ஆட்சி செய்கிற மாநிலங்களில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ரெய்டு, கவர்னர் மூலம் இடையூறு கொடுப்பது கண்டனத்துக்குரியது. அரசு எந்திரங்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. இந்த கைதை பழிவாங்கும் நடவடிக்கையாக, அச்சுறுத்தும் நடவடிக்கையாக தான் மக்கள் பார்க்கிறார்கள். இது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை பாதிக்காது. அமலாக்கத்துறை தன்னிச்சையாக செயல்படவில்லை. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறார். விவேகமாக இல்லாமல் செயல்படுகிறார். அண்ணாமலை கூட்டணியில் இருந்துக்கொண்டு சரியாக நிதானமாக செயல்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவரை மாற்றுவது டெல்லி தலைமையின் முடிவு. தமிழக தலைவராக இப்போது இருப்பவரே தொடருவார் என்று அறிவித்தாலும் பணியாற்றுவேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பணியாற்றுவேன். வேறு யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களோடும் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆராயப்பட்டன. கலெக்டர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் உள்பட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.