செஞ்சி மஸ்தான், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்


செஞ்சி மஸ்தான், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
x

கள்ளச்சாராய விற்பனைக்கு துணை செல்லும் செஞ்சி மஸ்தான், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்துக்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கிறது. 30-க்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் போலீசார் அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் நடந்து முடிந்த பின்னரே தமிழகம் முழுவதும் 1,558 கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து, பல ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

மரக்காணம் துயர சம்பவத்தில் மரூர் ராஜா என்ற சாராய வியாபாரியின் பெயர் வெளிப்பட்டிருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்த இவர் திண்டிவனம் 20-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவரின் கணவர் ஆவார். சாராய விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இவர் மேல், பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.

மரூர் ராஜா அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும் அமைச்சரின் செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையை தொடர்ந்து வந்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் தி.மு.க.வை விமர்சித்தால் உடனே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் தி.மு.க. அரசு, பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தும் மரூர் ராஜா மேல் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்?.

செஞ்சி மஸ்தான் உடனான நெருக்கமா? ஒரு சாராய வியாபாரியை செஞ்சி மஸ்தான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாரா? தமிழகம் முழுவதும் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருப்பது அரசு மேற்கொண்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட சாராயத்தின் அளவிலும், 1,558 சாராய வியாபாரிகள் கைது நடவடிக்கைகளிலும் வெளிப்படையாகியிருக்கிறது. இத்தனை நாட்களாக நடந்து வரும் கள்ளச்சாராய விற்பனை அரசுக்கும், போலீசுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்துவது மதுவிலக்கு துறையின் முக்கிய பொறுப்பாகும். ஆனால் அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாமல் இத்தனை அதிகமான அளவில் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்குமா? என்பது கேள்விக்குறி.

கள்ளச்சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருவதாக இருந்த நிலையில் சம்பவ இடத்துக்கே வரவில்லை. ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவர் மேல் வழக்குப்பதிவு செய்ய தமிழக போலீசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகிய 2 பேரும் கள்ளச்சாராய விற்பனை குறித்து அறிந்திருந்தும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அல்லது தங்கள் அமைச்சர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து தவறியிருக்கிறார்கள்.

ஏற்கனவே டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியை பறிப்பது போதாதென்று, கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை செல்லும் இவர்கள் 2 பேரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் தாய்மார்களின் கண்ணீரையும் வெறும் இழப்பீடு கொடுத்து சரி செய்துவிடலாம் என்று முதல்-அமைச்சர் நினைத்தால், அது மிகவும் தவறான போக்காகும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் பா.ஜ.க. தயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story