விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்டவை : சாலையோரத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பூந்தமல்லி அருகே விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பைபாஸ் சர்வீஸ் சாலையை ஒட்டி விபத்தில் சிக்கிய வாகனங்கள் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். இதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், ஆட்டோ உள்ளிட்ட விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு தீ பரவியது.
அதில் அந்த வாகனங்களும் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் விபத்தில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.