அந்தியூர் புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முற்றுகை; முறைகேடு செய்வதாக புகார்
முறைகேடு செய்வதாக கூறி அந்தியூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டார்கள்.
அந்தியூர்
முறைகேடு செய்வதாக கூறி அந்தியூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டார்கள்.
பால் உற்பத்தியாளர் சங்கம்
அந்தியூர் புதுப்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 500 பேர் உறுப்பினராக உள்ளனர். இதில் 200 பேர் காலை, மாலை 2 வேளைகளும் பால் கொண்டு வந்து ஊற்றுகிறார்கள்.
புதுப்பாளையத்தை சேர்ந்த ரேவதி என்பவர் புதுப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் காலை 10 லிட்டர், மாலை 10 லிட்டர் பால் ஊற்றி வந்துள்ளார். 10 நாட்களுக்கு ஒரு முறை உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
அதிர்ச்சி
இந்தநிலையில் ரேவதி தான் ஊற்றிய பாலுக்கான பணத்தை வங்கியில் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஒவ்வொரு நாளும் அவர் 20 லிட்டர் பால் ஊற்றியதற்கு 10 லிட்டர் மட்டும் கணக்கில் ஏற்றப்பட்டு பணம் செலுத்தப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பால் ஊற்றும்போது சங்கத்தில் கொடுக்கும் ரசீதை எடுத்து பார்த்தார். அதில் 20 லிட்டர் என வரவு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வங்கி கணக்கில் 10 லிட்டருக்கு மட்டுமே பணம் ெசலுத்தியிருந்தது தெரிந்தது. இதுபற்றி அவர் மற்ற உறுப்பினர்களிடம் கூறினார். இதனால் அவர்களும் தங்கள் வங்கி கணக்கை சரிபார்த்தபோது அவர்களுக்கு கொடுத்த ரசீதுக்கும், வங்கியில் செலுத்தப்பட்டு இருந்த தொகைக்கும் வித்தியாசம் இருந்தது.
முற்றுகை
இதனால் பால் கூட்டுறவு சங்கத்தில் மோசடி நடந்திருப்பதை அறிந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று காலை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்கத்துக்கு நேரில் சென்று முற்றுகையில் ஈடுபட்டு இருந்த உறுப்பினர்களிடம் நடந்தது பற்றி கேட்டார். அப்போது உறுப்பினர்கள் நடந்த மோசடியை ரசீதுடன் காட்டினார்கள். இதையடுத்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் இந்த பிரச்சினையை உடனே கொண்டு சென்று தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்கிறேன் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். இதனால் சுமார் 3 மணி நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
பரபரப்பு
100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் இதுபோல் மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் பலர் பால் ஊற்றும்போது சங்கத்தில் கொடுக்கும் ரசீதை வெளியே வந்ததும் தூக்கி எறிந்து விட்டதால் அவர்களால் தங்களது வங்கி கணக்கை சரிபார்க்க முடியவில்லை என்று கூறினார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.