தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லை அடுத்த வாழைக்காய்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரவேல் வாழைக்காய்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (30), என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த கரும்பாயூரம் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து குமாரவேலுவிடம் தகராறு செய்தனர். மேலும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த குமாரவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து, குமாரவேலை அரிவாளால் வெட்டிய செந்தில்குமார், உதயகுமார், கரும்பாயூரம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.