தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
திசையன்விளையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திசையன்விளை:
கன்னியாகுமரி மாவட்டம் தட்டான்விளையைச் சேர்ந்தவர் ரகுபால். கட்டிட காண்டிராக்டரான இவர் திசையன்விளையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான விஜய்யும் (வயது 26) கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரகுபாலுக்கும், அ.தி.மு.க. பிரமுகரும், திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான கண்ணனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது ரகுபாலை கண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட விஜயை கண்ணன், அவருடைய மகன்கள் கியூபர்ட், சாம், உறவினரான அரவிந்த், செல்வகுமார் ஆகியோர் அடித்து உதைத்து அரிவாளால் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விஜயை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த், செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கண்ணன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.