மதுபோதையில் தகராறு செய்ததால் அடித்துக்கொல்லப்பட்டது அம்பலம்
கும்பகோணம் அருகே மதுபோதையில் தகராறு செய்த சிற்ப தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே மதுபோதையில் தகராறு செய்த சிற்ப தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சிற்ப ெதாழிலாளி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வைரப்பன்(வயது 33). சிற்ப தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் வைரப்பனிடம் கோபித்துக்கொண்டு ஜெயலட்சுமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைரப்பன் தவறி கீேழ விழுந்ததாக கூறி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வைரப்பன் உயிரிழந்தார்.
உடல் அடக்க ஏற்பாடுகள்
இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது அங்கு வந்த வைரப்பன் மனைவி ஜெயலட்சுமி தனது கணவரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என சந்தேகம் எழுப்பினார்.இது குறித்து ஜெயலட்சுமியின் சித்தப்பா கீழக்கொட்டியூரை சேர்ந்த சுப்ரமணியன், திருவிடைமருதூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வைரப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இது குறித்து சந்தேக மரணம் என திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வைரப்பன் குடித்து விட்டு வந்து தகராறு செய்தபோது அவரது அண்ணன் வேலப்பனுடன்(39) கைகலப்பு ஏற்பட்டதும், அதில் கீழே விழுந்த வைரப்பன் ஆஸ்பத்ரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வேலப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.