பிளஸ்-2 தமிழ் தேர்வு: ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன; மாணவ-மாணவிகள் பேட்டி


பிளஸ்-2 தமிழ் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

பிளஸ்-2 தமிழ் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. தேர்வு முடிந்ததும் தேர்வு அறைகளை விட்டு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர். முதல் தேர்வு தமிழ் என்பதால் மிகப்பெரிய பதற்றம் எதுவும் இன்றி மாணவ-மாணவிகள் வெளியே வந்ததை பார்க்க முடிந்தது. தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவி பி.ஜி.தங்கம் ரூபினி:-

நான் அறிவியல் பிரிவில் படித்து வருகிறேன். தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. பெரிய விடைகள் எழுத வேண்டிய கேள்விகள் அனைத்தும் நாங்கள் ஏற்கனவே படித்த கேள்விகளாக இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் கேள்விகள், ஏற்கனவே இருந்த கேள்விகளில் இல்லாமல் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அது சற்று சிரமமாக இருந்தது. 90 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன்.

நல்ல மதிப்பெண்

ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.செந்தில்குமார்:-

நான் பிளஸ்-2 கணினி அறிவியல் படிக்கிறேன். தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. ஆனால் ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் நாங்கள் முக்கியம் என்று படிக்காத கேள்விகளாக இருந்ததால் சிரமமாக இருந்தது. மற்றபடி அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதி இருக்கிறேன். நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். இனி வரும் தேர்வுகளை நன்றாக எழுதுவேன்.

திண்டல் பி.வி.பி. பள்ளி மாணவர் மதிவாணன்:-

தமிழ் தேர்வில் அனைவரும் தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற அளவில் கேள்விகள் இருந்தன. சில ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்று குழப்பமாக இருந்தன. அது மாணவ-மாணவிகளை குழப்ப வேண்டும் என்று கேட்டிருப்பதாக நினைக்கிறேன். பாடப்புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள் மட்டும்தான் அந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும். நெடுவினாக்களில் சில கேள்விகள் குழப்பமாக இருந்தாலும், அதற்கான மாற்று கேள்விகள் எளிதாக இருந்ததால் பிரச்சினை இல்லை.

புதிய மையம்

ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனார் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.தருண்:-

எங்கள் பள்ளிக்கான தேர்வு மையம் சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய மையமாக இருந்தாலும் தேர்வை நன்றாக எழுதினோம். கேள்விகள் எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகள்தான் சற்று சிரமமாக இருந்தது. மற்றபடி நன்றாகவே தேர்வு எழுதினோம். நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்று நம்புகிறோம்.

பி.வி.பி பள்ளி மாணவி ப.சு.ராஜேஸ்வரி:-

இந்த தேர்வை நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி சுமாராக படிப்பவர்களும் எளிதாக அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில்தான் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு ஏற்கனவே தேர்வு நடத்தி, எங்களை பக்குவப்படுத்தி வைத்திருந்தனர். புத்தகத்தை முழுமையாக படித்து இருந்தவர்கள் ஒரு மதிப்பெண் கேள்விகளையும் சுலபமாக எழுத முடிந்தது. மற்றவர்களுக்கு அது சிரமம்தான். முதல் தேர்வை நன்றாக எழுதியதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அனைவருமே நன்றாக தேர்வு எழுதி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

2 கேள்விகள் தான்...

வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.பிரியதர்ஷினி கூறியதாவது:-

எங்கள் பள்ளிக்கூடத்தில் பல முறை பொதுத்தேர்வு போன்றே மாதிரி தேர்வுகள் நிறைய எழுதி இருந்தோம். எங்கள் ஆசிரியைகள் பொதுத்தேர்வுக்கு எங்களை தயார் செய்து வைத்திருந்ததால் இந்த தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்வியும் ஒன்று அல்லது 2 கேள்விகள்தான் சற்று சிரமமாக இருந்தன. மற்ற அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் எழுதி இருக்கிறோம். எங்களுக்கு தேர்வு குறித்த பயம் இல்லை. அடுத்த தேர்வுகளையும் உற்சாகமாக எதிர்கொண்டு எழுதுவோம்.

மாணவர் தீபன் கார்த்திக்:-

தமிழ் தேர்வை எந்த குழப்பமும் இன்றி எழுதி இருக்கிறேன். மற்றவர்களுக்கும் இந்த தேர்வு எளிதாகத்தான் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று சிரமமாக இருந்தது. நன்றாக படிக்காத மாணவர்களுக்கு சற்று சவாலான தேர்வுதான். ஆனால் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்று நம்புகிறேன்

மாணவி கு.ஐஸ்வர்யா:-

பொதுத்தேர்வு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லாமல், மிகவும் எளிதாக கேள்விகள் இருந்தன. கேள்விகளை பார்த்ததும் பயம் எல்லாம் சென்று விட்டது. புத்தகங்களின் உள்ளே இருந்து கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் கேள்விகளில்தான் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனாலும் நன்றாகவே தேர்வு எழுதி இருக்கிறோம்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story