மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மத்திய அரசு நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதில் ரூ.2½ லட்சத்துக்குள் குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது http://bcmbcmw.tn.gov.in.?welachemes.htm.#scholarshipschemes எனும் இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.