சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,187-க்கு ஏலம் ஒரே நாளில் 717 ரூபாய் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் மகிழ்ச்சி
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.717 விலை அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 187-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூ மார்க்கெட்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மல்லிகைப்பூ கிலோ ரூ.2,187
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 187-க்கும், முல்லை ரூ.740-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கும், முல்லை ரூ.680-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.74-க்கும், பட்டுப்பூ ரூ.70-க்கும், ஜாதிமல்லி ரூ.850-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.717-ம், முல்லை ரூ.60-ம், பட்டுப்பூ ரூ.30-ம், கனகாம்பரம் ரூ.150-ம், சம்பங்கி ரூ.20-ம் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதிக்கு பிறகு மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து விற்பனை ஆனது. மல்லிகைப்பூ ஒரே நாளில் 717 ரூபாய் விலை அதிகரித்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'தற்போது பனிக்காலமாக இருப்பதால் மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்கள் பூப்பதில்லை. இதனால் இந்த பூக்களின் வரத்து குறைந்த அளவே வருகிறது. அதேவேளையில் இந்த பூக்களுக்கு தேவை அதிகமாக உள்ளதால் ஏலத்தில் வியாபாரிகள் போட்டிபோட்டு பூக்களை ஏலம் எடுக்கின்றனர். எனவே பூக்கள் விலை அதிகரித்து விற்பனை ஆனது,' என்றனர்.