தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

பொள்ளாச்சி அருகே கோட்டூர் கடை வீதியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 9-ந் தேதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டூர் நகர பா.ஜனதா தலைவர் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தூய்மை பணியாளர்களை திட்டியவர்களை வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குபதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தூய்மை பணியின் போது பணியாளர்களை திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

மேலும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 75 பேர் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தல், சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்துதல் போன்ற சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் தரப்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story