நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.11 ஆயிரத்து 50, தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 36 மாத ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரத்தை ஊராட்சி மூலம் ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடை, பணி பாதுகாப்பு, உபகரணங்கள் மற்றும் மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட தலைவர் சிவனருட்செல்வன், துணை செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.