வயலோகம் தர்காவில் சந்தனக்கூடு விழா
வயலோகம் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
அன்னவாசல் அருகே வயலோகத்தில் மஹான் ஹஜரத் சையதுமுகமது மகான் ஹஜரத் முகமதுகனி அவுலியா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சமூக நல்லிணக்க விழாவாக சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சந்தனக்கூடு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் சந்தனக்கூடு விழா நடத்த அரசு அனுமதி வழங்கியதையடுத்து கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் சிறப்பு துவா நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு விழா நடைபெற்றது. சந்தனக்கூடு விழா நடைபெறுவதையொட்டி பள்ளிவாசலில் இருந்து போர்வை பெட்டியை மற்றொரு தர்காவிற்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு போர்வை பெட்டிக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் போர்வை பெட்டியை தர்காவிற்கு எடுத்து வந்து பாவா மீது போர்வையை போர்த்திய பின்னர் சந்தனக்கூடு வாணவேடிக்கைகளுடன் தர்காவை வலம் வந்தது. பின்னர் சந்தனம் பூசப்பட்டு சந்தனக்கூடு விழா நிறைவடைந்தது. இதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசாரும் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) கந்தூரி விழாவும், 9-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.