மணல் திட்டுகளை அகற்றி தூர்வார வேண்டும்
மணல் திட்டுகளை அகற்றி தூர்வார வேண்டும்
நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள ஆறுகளில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் திட்டுகள்
நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணையிலிருந்து பாமணியாறு, வெண்ணாறு, கோரையாறு என 3 ஆறுகள் பிரிந்து திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பாசன வசதி கிடைக்கிறது. இந்த ஆறுகளில் பாமணியாற்றில் சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, நடுப்படுகை, பாப்பையன் தோப்பு, பழையநீடாமங்கலம், அனுமந்தபுரம், ஒட்டக்குடி, கிளரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கோரையாற்றில் ஒரத்தூர், நீடாமங்கலம், பெரியார்தெரு, முல்லைவாசல், பெரம்பூர், கண்ணம்பாடி, மேலாளவந்தசேரி, கீழாளவந்தசேரி, கற்கோவில், வெள்ளக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆறுகளின் நடுவில் பெரிய பெரிய மணல் திட்டுகள் உள்ளன.
தூர்வார வேண்டும்
இந்த திட்டுகளின் நடுவில் மரங்கள், நாணல்கள், செடிகள் மண்டி ஆறுகள் தூர்ந்து குறுகளாகி கால்வாய்களாக தண்ணீர் ஓடுகிறது. மணல் திட்டுகள் ஆறுகளில் அதிக இடங்களில் இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேங்கி பாசனம் செய்யமுடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறுகளில் மணல் திட்டுகள் உள்ள இடங்களை பார்வையிட்டு மணல் திட்டுகளை அகற்றி பாசனத்திற்கு தண்ணீர் செல்ல ஏதுவாக தூர்வாரவேண்டும் என நீடாமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.