சேலத்தில் ஆயுத பூஜை விற்பனை களைகட்டியது


சேலத்தில் ஆயுத பூஜை விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 4 Oct 2022 1:30 AM IST (Updated: 4 Oct 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் ஆஜை பூஜை விற்பனை களைகட்டியது. மேலும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

சேலம்

2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் ஆஜை பூஜை விற்பனை களைகட்டியது. மேலும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

ஆயுதபூஜை பண்டிகை

ஆயுத பூஜை பண்டிகை இன்று (செவ்வாய்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ம்றறும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆயுத பூஜை பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்தநிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுத பூஜையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

பூஜை பொருட்கள் விற்பனை

அதன்படி சேலம் கடைவீதியில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.

இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில வாங்கி சென்றனர்.

சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர்.

சூப்பர் மார்க்கெட்டுகள்

இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். மேலும், சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது.

பழங்கள்

இதுகுறித்து சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்த பழ வியாபாரி மணிகண்டன் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120-க்கும், மாதுளை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையும், திராட்சை கிலோ ரூ.100-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.70-க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது, என்றார்.

பூக்கள் விலை உயர்வு

சேலத்தை சேர்ந்த பூ வியாபாரி பாலசுப்பிரமணி கூறுகையில், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல், ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.800 முதல் ரூ.1,000-க்கும், சன்ன மல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ.320-க்கும், சாமந்தி கிலோ ரூ.250 முதல் 300-க் கும், சம்பங்கி ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், கோழிக்கொண்டை ரூ.50 முதல் 80 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த இல்லத்தரசி கவிதா கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் பூஜை பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. எந்த பொருட்களை கேட்டாலும் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பண்டிகையை கொண்டாடுவதில் சிரமம் ஏற்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

காய்கறி விலை குறைவு

சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த விவசாயி மாதேஸ்வரன் கூறுகையில், நான் தினமும் சூரமங்கலம் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறேன். கேரட், பீன்ஸ், தக்காளி தவிர மற்ற காய்கறிகள் விலை உயரவில்லை. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.30-க்கும், தக்காளி ரூ.38-க்கும், வெண்டை ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் ரூ.44-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.65-க்கு விற்ற ஒரு கட்டு கொத்தமல்லி தற்போது ரூ.20 ஆக குறைந்துள்ளது. இந்த ஆயுத பூஜைக்கு காய்கறிகள் விலை உயரவில்லை, என்றார்.

கடலை, பொரி விலை?

சேலம் பால் மார்க்கெட்டில் ஒரு பக்கா பொரி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, பொதுமக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப பொரி, கடலையை வாங்கி சென்றனர். 7 கிலோ கொண்ட பொரி மூட்டை ரூ.450-க்கும், கருப்பு சுண்டல் கிலோ ரூ.65-க்கும், வெள்ளை சுண்டல் ரூ.85 முதல் ரூ.120 வரையும், பொட்டுக்கடலை ரூ.80-க்கும், நிலக்கடலை ரூ.140-க்கும், நாட்டு சர்க்கரை ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story