கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் அய்யலூர் செல்லும் சாலையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். இந்த ஆடுகளை வாங்குவதற்காக ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்வார்கள். அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுவாச்சூரில் ஆட்டுச்சந்தை தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிய தொடங்கினர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க கிறிஸ்தவர்கள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் சந்தைக்கு வருவார்கள் என்று ஆடுகளை விற்க வந்தவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகளை வாங்க ஆட்கள் வரவில்லை. இதனால் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமானது. சுமார் ரூ.5 லட்சத்துக்குள் தான் ஆடுகள் விற்பனை ஆனதாகவும், இனி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.