ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்- கடும் போக்குவரத்து நெரிசல்


ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்- கடும் போக்குவரத்து நெரிசல்
x

ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்- கடும் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு

ஈரோடு பெருந்துறைரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சோபாவில் பழுது

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). ஜவுளி வியாபாரி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈரோடு பெருந்துறைரோடு பழையபாளையத்தில் உள்ள மார்க் டிரெண்ட்ஸ் என்ற பிரபல பர்னிச்சர் கடைக்கு சென்றார். அங்கு சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை மொத்தம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்துக்கு வாங்கினார். இதையடுத்து கடையின் ஊழியர்கள் செந்தில்குமாரின் வீட்டுக்கு பர்னிச்சர் பொருட்களை கொண்டு சென்று வைத்தனர். அப்போது அவர் வாங்கிய சோபாவில் பழுது ஏற்பட்டு இருந்தது.

இதனால் செந்தில்குமார், கடையின் நிர்வாகிகளிடம்தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மேலும், புதிய சோபாவை மாற்றி கொடுக்கும்படி கேட்டு உள்ளார். ஆனால் கடைக்காரர்கள் சர்வீஸ் மட்டும் செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் 6 மாதங்களாகியும் சோபாவை சரிசெய்து கொடுக்கவில்லை.

சாலை மறியல்

இந்தநிலையில் செந்தில்குமார் தனக்கு தெரிந்தவர்களுடன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று முற்றுகையிட்டார். அப்போது பழுதடைந்த சோபாவை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று முறையிட்டு உள்ளார். ஆனால் கடைக்காரர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈரோடு-பெருந்துறைரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அந்த வழியாக வாகனங்ள் நீண்ட வரிசையில் வழிநெடுகிலும் நின்றன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடையின் நிர்வாகிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டார்கள். அதன்பிறகு கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் போலீசார் கேட்டும் சரியான பதில் அளிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த மறியல் போராட்டம் காரணமாக பெருந்துறைரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story