தமிழ்நாட்டில் நாளை நடைபெறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு


தமிழ்நாட்டில் நாளை நடைபெறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு
x

தமிழ்நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னை உள்பட தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதை கருதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மனித சங்கிலி போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

45 இடங்களில் ஊர்வலம்

இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 45 இடங்களில் 16-ந் தேதி (நாளை) ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம் நடைபெறவில்லை.

ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட கொரட்டூர் விவேகானந்தா பள்ளி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் சங்கரா பள்ளி ஆகிய 2 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கி நடக்கிறது. ஊர்வலம் முடிவில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடும் கட்டுப்பாடு

இந்த ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடு, 12 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:=

* ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்கள் குறித்தோ, சாதி-மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் கருத்து கூற கூடாது.

* இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துகளையும் வெளிப்படுத்தக்கூடாது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தவித செயல்களையும் செய்யக்கூடாது.

* பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.

கம்புகள், ஆயுதங்கள் ஏந்த தடை

* ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கை களில் ஏந்தி செல்ல கூடாது.

* ஊர்வலகத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்ற ஏற்பாடுகளை போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

* ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இடது புறமாக மட்டுமே செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலம் செல்ல பயன்படுத்த வேண்டும்.

* போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், ஊர்வலத்தை ஒழுங்குப்படுத்தவும் போலீசாருக்கு உதவும் வகையில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் போதுமான அளவுக்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.

* போலீசார் அனுமதி வழங்கிய வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* பெட்டி வடிவிலான ஒலிப்பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சப்தம் 15 வாட்ஸ்களுக்கு அதிகம் இருக்க கூடாது. கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால்...

* ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

* பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பட்டாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

* இந்த கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணத்தை கொண்டும் மீறக்கூடாது. மீறினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story