தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம்: முதல்-அமைச்சர் உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம்: முதல்-அமைச்சர் உத்தரவு
x

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசாரணை ஆணையம் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அந்த பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆணையம் அமைப்பு

அமைதியான முறையில் நடந்த இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த 22.5.2018 அன்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கார்த்திக், ஸ்னோலின் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும்பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்து, தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பரிந்துரை

இந்த ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை சட்டசபையில் கடந்த அக்டோபர் 18-ந் தேதி அரசு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் போலீசார் அத்துமீறி நடந்த பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் பற்றி விவரிக்கப்பட்டு இருந்தது. அதில், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கைகளையும் அறிவிக்கவில்லை.

போலீசார் நடத்திய இந்த துப்பாக்கி சூடு, வரம்பு மீறிய பொருத்தமற்ற செயல். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தனித்தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பாகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அந்த சம்பவத்தில் போலீசார் தரப்பில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக 17 போலீசார் மீதும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீதும், 3 வருவாய்த்துறை அலுவலர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இறந்தவரின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டையும் (ஏற்கனவே ரூ.20 லட்சம் தரப்பட்டுள்ளது), காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டையும் (ஏற்கனவே ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது) வழங்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்து இருந்தது.

சட்டசபையில்....

அதைத்தொடர்ந்து சட்டசபையில் மறுநாளில் (அக்டோபர் 19-ந் தேதி) நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேலும் ரூ.5 லட்சம்

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்-அமைச்சர் 16-ந் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story