டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி
டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த கர்நாடக மாநில பெண்கள் உள்பட 4 பேர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த கர்நாடக மாநில பெண்கள் உள்பட 4 பேர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் சீட்
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் குறவன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகள் சந்தியா.
இந்த நிலையில் சந்தியாவை நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வைத்து டாக்டராக்குவதற்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ் டெய்லி, அமுது டெய்லி, மோனிகா, மார்க் டெய்லி ஆகிய 4 பேர் ரமேஷ் மற்றும் கல்பனாவிடம் ஆசைவார்த்தை கூறினர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரிடம் கூகுள் பே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் சுமார் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளனர்.
ரூ.15 லட்சம் மோசடி
அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர் சீட்டு வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து உள்ளனர்.
மேலும் நிலுவையில் உள்ள சுமார் 15 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டனர்.
இதுகுறித்து கல்பனா நேற்று 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.