தொழிலாளியை கைது செய்யக்கோரி திடீர் சாலைமறியல் போராட்டம்
சுரண்டை அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை கைது செய்யக்கோரி நேற்று இரவு திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டை அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை கைது செய்யக்கோரி நேற்று இரவு திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
பாலியல் தொந்தரவு
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையை அடுத்துள்ளது ஊர்மேலழகியான் கிராமம்.
இந்த பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மாடசாமி மகன் மாணிக்கம் (வயது 25) என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் கொடுத்த தகவல் அறிந்ததும் மாணிக்கம் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 8 மணிக்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் உறுதி
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தென்காசி துணை சூப்பிரண்டு நாகசங்கர், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் வேல்கனி, சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவியின் உறவினர்களிடம், தப்பி சென்ற குற்றவாளியை கைது செய்து விடுவோம் என கூறினர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.