காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து பரதராமி பூசாரி வலசை பகுதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம் இல்லை
குடியாத்தம் அடுத்த பரதராமி ஊராட்சி பூசாரிவலசை பகுதியில் பக்காசூரன்பட்டி, ஆலங்கனேரிபட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த பல நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
அதனால் நேற்று காலையில் அப்பகுதி பொதுமக்கள் பரதராமி-பனமடங்கி வழியாக வேலூர் செல்லும் சாலையில் பூசாரிவலசை கிராமம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் சாலையின் இரு புறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்காக வெளியூர் செல்லும் கிராம மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனிப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் கேசவலு, ஒன்றியக்குழு உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.