வேலை பார்த்தற்கு முறையான ஊதியம் வழங்கக்கோரி நகர்ப்புற வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
வேலை பார்த்தற்கு முறையான ஊதியம் வழங்கக்கோரி நகர்ப்புற வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
தொழிலாளர்கள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழக அரசின் நகர்ப்புற வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பூவம்பாடியை சேர்ந்த நகர்ப்புற வேலை திட்ட தொழிலாளர்கள் கடந்த வாரம் வாரி, குளம், தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டனர். அதற்கு நபர் ஒருவருக்கு ஒருநாள் சம்பள கூலியாக ரூ.19 வழங்கியதாகவும், அதிலும் சில பேருக்கு சம்பளத் தொகை வரவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பூவம்பாடியை சேர்ந்த பொதுமக்கள் முறையான ஊதியம் வழங்கக்கோரியும், ஒருநாள் சம்பளம் ரூ.19 வழங்கியதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த செயல் அலுவலரிடம் முறையிட்டனர். அதற்கு அவர் நீங்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கையை தெரியப்படுத்துங்கள் என்று கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்ட தொழிலாளர்கள் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, செயல் அலுவலர் குமரவேலன், பேரூராட்சி தலைவர் சவுந்தரபிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது, நீங்கள் ஏற்கனவே வேலை பார்த்தற்கான இடத்தினை அளவீடு செய்து, தொழிலாளர்களுக்கான கூலி தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.