தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி, குளம் சீரமைத்தல், சாலை பணி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்ய நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைவருக்கும் முறையாக பணி வழங்க கோரி நேற்று காலை சுங்குவாச்சத்திரம்- மப்பேடு நெடுஞ்சாலையான கல்லம்பேடு பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மப்பேடு போலீசார் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.