அபராதங்கள் உயர்த்துவதால் சாலை விபத்துகள் குறையுமா? மக்கள் கருத்து


தினத்தந்தி 23 Oct 2022 5:00 AM IST (Updated: 23 Oct 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

அபராதங்கள் உயர்த்துவதால் சாலை விபத்துகள் குறையுமா? என்பது குறித்து மக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களாலும், சாலை விதிகளை பின்பற்றாததாலும் விபத்துகள் தொடர்கதையாக நீள்கிறது.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1½ லட்சம் பேர் வரையில் சாலை விபத்துகளால் தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். 2½ லட்சத்தில் இருந்து 3 லட்சம் பேர் காயம் அடைகிறார்கள். இதில் வேதனை என்னவெனில், விபத்தில் மரணத்தை தழுபவர்களில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்கிறது புள்ளிவிவரங்கள்.

சட்ட திருத்தம்

விபத்துகளை தடுக்க ஒரே தீர்வு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவதுதான் என்று, அந்த சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்து, சில திருத்தங்களை மேற்கொள்ள முன்வந்தது.

நாட்டில் கடந்த 1939-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு 1988-ம் ஆண்டில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் தற்போது மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசால் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் அப்போது மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

இதன்பின்னர் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா காலாவதியான நிலையில், புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய மசோதாவில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டு, சுமார் 20 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டது.

சாலை கட்டமைப்பு

இந்த சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் தமிழகத்தில் அமல்படுத்தாத நிலையில் இருந்தது. இதனால் போலீசார் பழைய முறையையே பின்பற்றினார்கள்.

தற்போது, தமிழகத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி, உடனடியாக இச்சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அபராத தொகையானது பல மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே எதிர்ப்பை சந்திப்பதாக அமைந்துள்ளது.

விபத்துகளை தடுக்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தாலும், இன்றும் சாலை கட்டமைப்பு முறையாக இல்லாமல் தினமும் விபத்துகள் நடக்கிறது.

இதனால் எத்தனை பேரின் உயிர் பறிபோய் உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி என்றால் சாலை கட்டமைப்புகளை உருவாக்க தவறியவர்கள் யார்? அவர்களுக்கு எந்த வகையில் அபராதம் விதிப்பது என்ற கேள்விகளை மக்கள் முன்வைக்கிறார்கள்.

அதோடு, மக்களிடம் அபராதம் என்ற பெயரில் பணத்தை பறித்து அரசின் கஜானாவை நிரப்ப வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

உயிர் போவதை பற்றி கவலை இல்லையா?

இந்த கேள்விக்கு, இந்த சட்டம் திருத்தங்களுடன் கொண்டு வந்த போதே, மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, பதிலளித்து இருக்கிறார். அதாவது, வாகன ஓட்டிகளிடம் அபராதத்தை பெற்று கஜானாவை நிரப்ப வேண்டும் என்பது அரசின்நோக்கம் இல்லை. சாலை போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், விபத்துகளை குறைக்கவும் தான் இந்த நடவடிக்கை. மக்களின் உயிரை விட அபராதம் தான் முக்கியமா? ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் அதை பற்றி கவலைப்படவில்லையா? என்று வேதனை தெரிவித்து இருந்தார்.

நிர்கதியான குடும்பங்கள்

இன்று எத்தனையோ குடும்பங்கள் உயிர்களையும், உறவுகளையும் விபத்துகளில் பறிகொடுத்து நிர்கதியாகி நிற்கின்றது. ஆயிரம் ரூபாய் அபராதமா என்று கேட்கும் நாம், விபத்தில் உயிர்களை பறிகொடுத்துவிட்டு அந்த ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் தவிக்கும் தவிப்புகள் அந்த குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.

இத்தகைய நிலை இனியும் உருவாகாமல் இருக்க வேண்டுமெனில், விபத்துகளை தடுக்க இந்த கடுமையான சட்டத்தை வரவேற்கவும் செய்ய வேண்டும் ஒரு சாரார் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள்.

இருப்பினும் இந்த சட்டம் தொடர்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்:-

உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரம் டாக்டர் சவுமியா:-

சாலை விதிகளில் புதிதாக கொண்டுவந்துள்ள மாற்றங்கள், அபராதம் என்பது வரவறே்க தக்கது தான். அரசு மனித உயிர்களை காப்பாற்ற புதிய முயற்சியை கொண்டுவருவது வரவேற்க தக்கது. சுயகட்டுப்பாடுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதற்காக அரசு இதுபோன்று கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தவறில்லை. அபராதங்களை உயர்த்தினால் மட்டுமே வாகன ஓட்டிகள் சற்று பொறுப்புடன் வாகனத்தை இயக்குவார்கள்.

மேலும், ஒரு வாரத்துக்கும் மட்டும் போலீசார் கெடுபிடி காண்பித்துவிட்டு அதன் பின்னர், இந்த சட்டத்தை நீர்த்துப்போக வைத்துவிடக்கூடாது. தொடர்ந்து கண்காணித்து, விபத்துகளை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகா மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அவர்களுடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடும் சம்பவங்களும் இனி குறையும் என்றார்.

விழுப்புரம் அகிலன்:-

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே கடுமையான குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களிடையே மிகப்பெரிய அவப்பெயராக அமையும். மது குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்துவது, அதிவேகம், அவசர ஊர்திக்கு வழிவிடாமல் செல்வது போன்ற வகைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கலாம்.

தலைக்கவசம், ஓட்டுனர் உரிமத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டு போனாலும் கடுமையான அபராதம் என்பதெல்லாம் மிகப்பெரிய தவறாக பார்க்கிறோம். உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்.

மேலும் அரசியலமைப்பு சட்டம் எல்லாம், பொதுமக்களை ஒடுக்கும் சட்டமாகவே இயற்றுகிறார்கள். இதுவே லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை கடுமையாக தண்டிக்கவும், தவறு செய்யும் அரசியல்வாதிகளை கடுமையாக தண்டிக்கும் எந்தவிதமான சட்டத்தையும் எந்த அரசும் கொண்டு வர முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்.

உண்மையில் மக்கள் மீது பற்று இருந்தால் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை மூடுங்கள். இதுவே தற்போதைய தமிழக தாய்மார்கள், பொதுமக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக இருக்கிறது.

திண்டிவனம் கிடங்கல்-1ஆட்டோ டிரைவர் தொல்காப்பியம்:-

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராத தொகை அதிகமாக உள்ளதை குறைக்க வேண்டும். அரசு வருவாயை ஈட்டுவது, சுமையுடன் இருக்கும் தொழிலாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்றக்கூடியதாக உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க தண்டனையாக சுத்தம் செய்வது, முக்கிய இடங்களில் அவர் செய்த தவறை சுட்டிக்காட்டும் வகையில் நிற்க வைப்பது, மாறுபட்ட தண்டனைகளை வழங்கலாம்.

செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுபவர்கள், மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள், அதிக ஒலியை எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கும், அதிவேகமாக ஓட்டுபவர்களுக்கும் அபராத தொகை விதிப்பதில் தவறு ஏதுமில்லை. இருந்தபோதிலும் அபராதம் அதிகமாக விதிக்காமல் அதற்கு மாற்றாக அவர்கள் திருந்துவது போன்ற தண்டனையை அரசு வழங்கலாம்.

இன்சூரன்ஸ் கட்ட தவறியவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எது எப்படி இருந்தாலும் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அபராத தொகையை அரசு குறைக்க வேண்டும். மாற்றாக தண்டனை தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி தனலட்சுமி:-

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தற்போது திருத்தங்களுடன் புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு பாதுகாப்பானதாகும். இருந்தாலும் கிராமப்புறங்களில் இருந்து, விவசாயிகள் மற்றும் மக்கள் சின்ன, சின்ன தேவைகளுக்காக நகர பகுதிகளுக்கு வரும்போதும் பின்னால் அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது மக்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே கிராமப்புறத்தில் இருந்து நகர பகுதிக்கு வரும் சாலைகளில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை கொஞ்சம் தளர்த்த வேண்டும். மற்றப்படி இந்த சட்ட திருத்தம் வரவேற்க தக்கது என்பதுடன், இதனால் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

விக்கிரவாண்டி கலைச்செல்வம்:-

வாகன ஓட்டிகள் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பது அதிமுக்கியமான விஷயமாகும். அந்த சட்டவிதிகள் தற்போது திருத்தம் செய்யப்பட்டு அபராத தொகை அதிகமான அளவில் விதிக்கப்பட்டிருப்பது தனிப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. ஏற்கனவே வாடகை வாகனங்களை பல்வேறு சிரமங்களுக்கு இடையே இயக்கி வருகிறோம்.

சிறு தவறுகள், பெரிய அபராதம் விதித்தால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுகிறது, பொதுமக்கள் மீது அபராத தொகையை திணிப்பதை தவிர்த்து அரசு அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை, சட்டத்திட்டங்களை கொண்டு வந்தால் முறையாக இருக்கும்.

செஞ்சி ராஜா:-

தற்போது கூறிய பெரும்பாலான போக்குவரத்து விதிமுறைகள் ஏற்கனவே உள்ள சட்டத்திட்டங்கள்தான். ஆனால் அனைத்திற்கும் அபராத தொகை உயர்த்தி உள்ளதுதான் தற்போதைய புதிய நடைமுறை. ஏற்கனவே போலீசார், இவைகளை காரணம் காட்டி வாகன ஓட்டிகளிடம்அபராதம் வசூலித்து வருகிறார்கள். தற்போது அபராத தொகையை உயர்த்தியிருப்பது லஞ்சம் வாங்க போலீசாருக்குதான் சாதகமாக அமையும். மேலும் இந்த நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


Next Story