ஆறுகளை தூர்வார வேண்டும்


ஆறுகளை தூர்வார வேண்டும்
x

ஆறுகளை தூர்வார வேண்டும்

திருவாரூர்

நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஆறுகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

3 ஆறுகள்

நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு) உள்ளது. இங்கு கல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாறு வருகிறது. இந்த ஆறு வந்து சேரும் இடம் கோரையாறு தலைப்பாகும். இங்கிருந்து பாமணியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகள் பிரிந்து திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாசன வசதி தருகிறது. பாமணியாற்றில் 38,357 ஏக்கரிலும், கோரையாற்றில் 1,20,957 ஏக்கரிலும், வெண்ணாற்றில் 94, 219 ஏக்கரிலும் விவசாயிகள் மேட்டூர் அணை திறந்து வரும் தண்ணீரைக்கொண்டு ஆண்டுதோறும் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு முன் கூட்டியே பெய்த தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணை 3 முறை நிரம்பி அதன் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 24-ந்தேதியே குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்ததால் விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்தனர். இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்க உள்ள நிலையில், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நடுவில் மணல் திட்டுகள்

இந்தநிலையில் நீடாமங்கலத்தை சுற்றியுள்ள பாமணியாற்றில் சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல இடங்களிலும், கோரையாற்றில் ஒரத்தூர், பெரியார் தெரு, முல்லைவாசல், பெரம்பூர், கண்ணம்பாடி, கீழாளவந்தசேரி, கருவேலங்குளம் உள்ளிட்ட பல இடங்களிலும், வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, நடுப்படுகை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூர், ஒட்டக்குடி, களத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ஆறுகளின் நடுவில் மணல் திட்டுகளும், நாணல், பனை மரம், கருவேல மரங்கள் மற்றும் காட்டாமணக்கு செடிகள் திட்டு திட்டுகளாக காணப்படுகிறது.

தூர்வார வேண்டும்

இதனால் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு அதிகம் பயன்படாத நிலை உள்ளது. ஆறுகளில் மணல் அள்ளப்பட்டுள்ள நிலையில் ஆறுகள் கீழேயும், பாசன வாய்க்கால் மேலேயும் உள்ளதால் எவ்வளவு தண்ணீர் திறந்தாலும் பாசன மதகிலிருந்து ஏரி பாய தாமதம் ஏற்படுகிறது.

இந்த ஆறுகளில் உள்ள திட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது. எனவே மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் ஆறுகளில் தங்கு தடையின்றி செல்ல நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஆறுகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story