ஜெயங்கொண்டம் புதிய பஸ் நிலையத்தில் நோய் பரவும் அபாயம்
ஜெயங்கொண்டம் புதிய பஸ் நிலையத்தில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் கட்டப்பட்டு சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் அந்த கட்டிடத்துக்கு வலதுபுறத்தில் பெரிய அளவில் பரவலாக குழியாக்கப்பட்டுள்ள சாக்கடை குழியில் விழுகிறது. இந்த கழிவுநீர் குழியிலேயே தேங்கி நிற்பதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பயணிகள் அவ்வழியாக செல்லும் போது துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மூக்கை பொத்தியவாறே சென்று வரும் சூழல் நிலவி வருகிறது. இதே நிலை நீடித்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக முககவசம் அணிய வேண்டும் எனவும், அணியத் தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுபோன்று சுகாதாரக்கேடு உள்ள இடத்தில் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள், பயணிகள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.