மீண்டும் புத்துயிர் பெறும்: பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.
இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி கொடுத்தது.
ஓடி ஒளிந்தார்கள்
* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப்போவார்கள்.
அரசு வாகனங்கள் வருவதை கண்டாலே போதும் தங்களை பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.
* அவ்வாறு பிடித்து போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.
* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.
* மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
* நிர்ப்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித்தரப்பட்டன.
இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
காசு பார்க்கும் கயவர்கள்
'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது.
நாளடைவில் அது முடங்கிப்போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.
குழந்தைகளின் வயிற்றுப்பசியை போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திரைப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, ஆமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
போலீஸ் நடவடிக்கை
தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களை குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.
இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வு பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.
உழைத்து உண்ண வேண்டும்
சூளையை சேர்ந்த சிவா:-
முன்பெல்லாம் பிச்சைக்காரர்களிடம் 1 ரூபாய் கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிச்செல்வார்கள். ஆனால் தற்போது 1 ரூபாய் கொடுத்தால் நம்மை ஏளனமாக பார்க்கிறார்கள். கையேந்தும் முதியோர்களை பார்த்தால் தர்மம் செய்ய மனம் தானாகவே இறங்கி வருகிறது. ஆனால் கை, கால்கள் நல்ல நிலையில் உள்ளவர்கள், உழைக்காமல் உடலை வளர்க்க நினைப்பவர்கள் பிச்சைக்கு கையேந்தும்போது கோபம்தான் வருகிறது.
இவர்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று ஆதங்கம் வரும். தற்போது தமிழக போலீஸ்துறை தொடங்கி உள்ள 'ஆபரேஷன் மறுவாழ்வு' நடவடிக்கை ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குமார்:-
எனக்கு தற்போது 54 வயதாகிறது. எனக்கு 5 வயது இருக்கும்போது அம்மை நோய் ஏற்பட்டது. அப்போது என் கண் பார்வை பறிபோனது. 15 வயது வரை பெற்றோர் அரவணைப்பில் இருந்தேன். அதன்பின்னர் உழைத்து உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 35 ஆண்டுகளாக கடலை மிட்டாய் விற்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். சாப்பாட்டுக்காக யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வருகிறேன். என் உடலில் தெம்பு இருக்கும் வரை உழைத்துதான் சாப்பிடுவேன்.
என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களை வழங்கி தமிழக அரசு ஆதரவுக்கரமாக இருக்கிறது. தற்போது பிச்சை எடுப்பவர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு இல்லங்களில் தங்க வைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. உழைத்துதான் உண்ண வேண்டும் என்ற எண்ணம் பிச்சைக்காரர்கள் மனதில் எழ வேண்டும்.
வியாசர்பாடியை சேர்ந்த கன்னியம்மாள்:-
நிம்மதியைத் தேடி கோவிலுக்கு சென்றால் அங்கு பிச்சைக்காரர்கள் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. சில பிச்சைக்காரர்கள் காசு இல்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் காசு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று ஏதோ வழிப்பறி செய்வது போன்று துரத்துகிறார்கள்.
அவர்கள் இம்சை தாங்க முடியாமல் வேறு வழியின்றி வேண்டா, வெறுப்பாக பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. தற்போது பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால் ஓரிரு நாட்கள் மட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டு கைவிட்டுவிடக்கூடாது. தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
சுதந்திர பறவையாக...
பிராட்வே பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வரும் மாற்றுத்திறனாளி ஆறுமுகம்:-
எனது சொந்த ஊர் சேலம். பிழைப்பு தேடி சென்னை வந்தேன். இங்கு விபத்தில் சிக்கி கை-காலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் உழைப்பதற்கு எனது உடம்பு ஒத்துழைக்கவில்லை. எனவே வயிற்று பசியை போக்குவதற்காக பிச்சை தொழிலில் இறங்கினேன்.
சிலர் எனது நிலையைப் பார்த்து தானாகவே வந்து பணம் கொடுப்பார்கள். சிலர் கேட்டாலும் காது கேட்காதது போன்று செல்வார்கள். எனினும் அன்றாடம் உணவுத்தேவைக்கு பணம் கிடைத்துவிடுகிறது. தற்போது என்னைப் போன்ற பிச்சைக்காரர்கள் சுதந்திர பறவையாக இருக்கிறோம்.
எங்களை கூண்டுக்குள் அடைப்பது போன்று மறுவாழ்வு மையங்களில் அடைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆபரேஷன் மறுவாழ்வு நடவடிக்கை மூலம் மீட்கப்படும் வயதான பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அடைக்கலம். உடல்நிலை நன்றாக உள்ள பிச்சைக்காரர்கள் மனதில் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை; தகவல் தெரிவித்தால் பணம் வெகுமதி
குழந்தைகளைக் கடத்தி அவர்களை பிச்சைத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்கு தகுந்த பண வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
வாரி வழங்கும் பிச்சைக்காரர்
பிச்சைக்காரர்கள் என்றால் ஏளனமாகப் பார்க்கும் சமுதாயத்தில் பாண்டி என்ற பிச்சைக்காரர் (72) தனது சமூக செயல்பட்டால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு ஆகும். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் தனது மனைவி மறைவுக்கு பின்னர் மன நிம்மதிக்காக திருச்செந்தூர் கோவிலில் தங்கத் தொடங்கினார். நாளடைவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
தனக்கு தானமாக கிடைக்கும் பணத்தில் அரசு பள்ளிக்கூடங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவுவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்.
அவர், 'பிச்சை எடுக்கும் தொகையில் ஒரு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ஒதுக்குவேன்' என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. அப்போது மதுரை கலெக்டரிடம் பாண்டி ரூ.20 ஆயிரம் நன்கொடை அளித்து பாராட்டை பெற்றார். கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பாண்டி தானமாக கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து அரசு நலத்திட்டங்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளார். கொரோனா காலகட்டத்தின்போது பிச்சைக்காரர்கள் பரிதவித்த போது முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பாண்டி நன்கொடை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.