விழுப்புரத்தில்வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்சட்டபேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் பங்கேற்பு
விழுப்புரத்தில் வளர்ச்சி திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் சட்டபேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் இதுநாள் வரை எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது? நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது இதுவரை எவ்வளவு சதவீத பணிகள் நடந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று விழுப்புரம் வந்தனர்.
இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேலம் மேற்கு அருள், பண்ருட்டி வேல்முருகன், வானூர் சக்கரபாணி, அண்ணாநகர் மோகன், நாமக்கல் ராமலிங்கம், பெருந்துறை ஜெயக்குமார், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்ட கலெக்டர் சி.பழனி முன்னிலையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக சுற்றுச்சுவர் பணி, புதிய பஸ் நிலையம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, வீடூர் அணையை தூர்வாருதல் பணி, திண்டிவனம் புதிய பஸ் நிலையம், விக்கிரவாண்டி ஆதிதிராவிடர் அரசு மாணவிகள் விடுதி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
ஆய்வு கூட்டம்
இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.