கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு


கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு
x

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரகாஷ் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளின் நிலை குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியனின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. 3 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். துணை ஆட்சியர் நிலையில் இருந்து பணியிறக்கம் பெற்ற அலுவலர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்திட வலியுறுத்தியும் வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் தமிழகத்தின் 14 ஆயிரம் அலுவலர்களும் 'கோரிக்கை அட்டை' அணிவது என்றும், மேலும் வருகிற 20-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் 'பெருந்திரள் முறையீடு' அளிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் முதல்-அமைச்சருக்கும் விரைவு தபாலில் முறையீடு அனுப்பி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 60-ம் ஆண்டு வைர விழா மாநில மாநாட்டினை வருகிற டிசம்பர் மாதம் சென்னையில் சிறப்பாக நடத்துவது என்றும் கூட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story