ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு


ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 20 Dec 2022 1:00 AM IST (Updated: 20 Dec 2022 12:47 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் ரூ.1 லட்சம் திருட்டுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை- உடையார்பாளையம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 64). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி தனது மகனை பார்க்க நாகர்கோவில் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இவரது வீட்டின் முன் பகுதி விளக்கை அணைக்க பக்கத்தில் கடை வைத்திருக்கும் மெக்கானிக் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் நிறுத்தியிருந்த ராமசாமியின் ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அவர் ஊரில் இருந்து வந்து விட்டாரா? என்ற சந்தேகத்துடன் அவருக்கு போன் செய்து கேட்டுள்ளார். செல்போனில் பேசிய ராமசாமி தான் இன்னும் நாகர்கோவிலில் இருந்து வரவில்லை என்றும், வீட்டில் வேறு ஏதேனும் காணாமல் போய் உள்ளதா? என்று பாருங்கள் என்று கூறினார். அதனை தொடர்ந்து வீட்டை பார்த்து போது வீட்டின் முன் பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பதாக மெக்கானிக் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி செந்துறை போலீசார் மற்றும் அருகில் உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த தனது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளுக்கு இடையே வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பணம் மற்றும் ஸ்கூட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தாலுகா அலுவலகம் அருகே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story