நாகர்கோவில் குளத்தில் துப்புரவு தொழிலாளி பிணமாக மீட்பு
நாகர்கோவில் புத்தேரி குளத்தில் துப்புரவு தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் புத்தேரி குளத்தில் துப்புரவு தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புத்தேரி குளம்
நாகர்கோவில் புத்தேரி குளத்தில் நேற்று சில வாலிபர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் கரையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள செடி கொடியில் ஏதே ஒன்று மிதப்பதை கண்டனர். உடனே வாலிபர்கள் அங்கு நீந்தி சென்று பார்த்தனர். அங்கு செடி, கொடிகளுக்கு இடையே ஒரு ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
துப்புரவு தொழிலாளி
விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் புத்தேரி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (வயது 33) என்பது தெரிய வந்தது. இவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆரோக்கிய ராஜ் நேற்று குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதியில் சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த ஆரோக்கிய ராஜுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். துப்புரவு தொழிலாளி குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.