மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை 3 நாட்கள் கொண்டாட நடவடிக்கை; கலெக்டரிடம் கோரிக்கை
மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை 3 நாட்கள் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை 3 நாட்கள் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "ஆண்டிப்பட்டி அருகே பழையக்கோட்டை பகுதியில் மண் அள்ளுவதற்காக கனிமவளத்துறை வழங்கிய நடைசீட்டை திருத்தம் செய்து மீண்டும், மீண்டும் பயன்படுத்துகின்றனர். நடைசீட்டில் எழுதப்பட்ட எழுத்தை தீக்குச்சி நெருப்பின் வெப்பத்தால் அழித்து மீண்டும் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
கண்ணகி கோவில்
இந்த கூட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா தொடர்பாக சிவசேனா கட்சியின் மாநில தலைவர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதேகோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலைமணி தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக சாலை அமைப்பதற்கான ஆய்வு பணிக்கு அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆய்வுப் பணிகள் முடிந்துள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்துசமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் இந்த சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை மூலமாகவே கண்ணகி கோவிலில் அனைத்து வழிபாடு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை 3 நாட்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். திருவிழா நாளில் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து செல்பவர்கள் குமுளியில் ஜீப்களுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஜீப்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். கோவிலில் தமிழ்நாடு அர்ச்சகர்கள் மூலம் தமிழில் அர்ச்சனை செய்து பூஜை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஸ் வசதி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ் கொடுத்த மனுவில், "கடமலை-மயிலை ஒன்றியத்தில் 162 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்பவர்களுக்கு காலை 5.40 மணிக்கு வருசநாட்டில் இருந்து தேனிக்கும், இரவு 8.40 மணிக்கு தேனியில் இருந்து வருசநாட்டுக்கும் இயக்கப்பட்ட தனியார் பஸ் கடந்த 3 ஆண்டாக இயக்கப்படவில்லை. இதனால் அடுத்த பஸ்சுக்கு சுமார் 1.30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நேரங்களில் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.