நினைவு தினம்: காந்தி உருவப்படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மரியாதை
நினைவு தினத்தையொட்டி காந்தியின் உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை,
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் கீழே காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் காந்தியின் உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை கமிஷனர் சந்தீப் நந்தூரி, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புகைப்பட கண்காட்சி
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 'காந்தியும், உலக அமைதியும்' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை கவர்னர் ஆர்.என்.ரவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கண்காட்சியில் காந்தியின் வரலாற்று தொகுப்புகளுடன் அவரது அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை கவர்னர் ஆர்.என்.ரவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
கண்காட்சி அரங்கில் புத்தகங்கள் மூலம் காந்தியின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு 2 பேரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கவர்னரை வரவேற்ற முதல்-அமைச்சர்
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் 2 பேரும் புன்னகை பூத்த முகத்துடன் கைகுலுக்கி கொண்டனர். அதே போன்று நிகழ்ச்சி முடிந்த பின்னர் கவர்னரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். அப்போது 2 பேரும் சிறிது நேரம் பேசி கொண்டனர்.
ஒற்றுமை மிளிரும் சமூகமாக...
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, காந்திக்கு புகழாரம் செலுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையை கட்டமைக்க தனது உடல், பொருள் என அனைத்தையும் ஈந்து இந்த நாட்டின் உயிராகி போனவர், அண்ணல் காந்தியடிகள். இந்திய சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்திட, அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்கு பலியான இந்த நாளில் ஒற்றுமை மிளிரும் சமூகமாக திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சருடன் நெருக்கம் காட்டிய கவர்னர்
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற காந்தி நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் 'காந்தியும், உலக அமைதியும்' என்ற புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி கையில் கத்திரிகோல் கொடுக்கப்பட்டது. அப்போது அவரது அருகில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கத்திரிகோலை நீங்களும் பிடியுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினார். இதைத்தொடர்ந்து 2 பேரும் சேர்ந்து கத்திரிக்கோலை பிடித்து ரிப்பனை வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.