மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை


மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை
x

மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தமிழக தீயணைப்பு துறை டி.ஜி.பி. பி.கே.ரவி முன்னிலையில் நடந்தது.

செங்கல்பட்டு

மழை காலங்களில்...

புயல், பலத்த மழை போன்ற பேரிடர் காலங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கி தவிப்பது வழக்கம். அதேபோல் குளம், ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பின் போது பலர் தவறி விழுந்து விடுகின்றனர்.

அப்படி நீரில் மூழ்கி சிக்கி தவிக்கும் மக்களையும் எப்படி காப்பாற்றுவது, அதேபோல் மழை காலங்களில் பலத்த கடல் சீற்றத்தின் போது கடலில் குளித்து அலையில் சிக்குபவர்களை காப்பாற்றி எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகையை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குனர் டி.ஜி.பி. பி.கே.ரவி முன்னிலையில் மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் வெண்புருஷம் கடற்கரை பகுதியில் செயல் முறை விளக்கம் செய்து காட்டினர்.

ஆலோசனை

பின்னர் தீயணைப்பு துறை டி.ஜி.பி. பி.கே.ரவி மழை கால மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள ரப்பர் படகு, மிதவைகள், கயிறுகள், மரம் அறுக்கும் கருவிகள், நீர் இரைக்கும் மோட்டார்கள், ஜெனரோட்டர் உள்ளிட்ட பேரிடர் மீட்பு கருவிகள், சாதனைங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சண்முகம் மற்றும் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், சிறுசேரி, கேளம்பாக்கம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story