கோவிலில் தியானத்தில் அமர்ந்திருந்த மாணவன் மீட்பு
மார்த்தாண்டம் அருகே வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் கோவிலில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது மீட்கப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் கோவிலில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது மீட்கப்பட்டார்.
பிளஸ் 1 மாணவர்
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவருக்கு சில பாடங்களில் படிப்பு நன்றாக வரவில்லை.
எனவே மாணவரிடம் பெற்றோர் நன்றாக படிக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றும் வேலைக்கு தான் செல்வேன் என்றும் பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார். ஆனால் படிக்கிற வயதில் படிக்க வேண்டும் என மகனிடம் பெற்றோர் கூறியுள்ளனர்.
திடீர் மாயம்
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் வழக்கம் போல் சாப்பிட்ட அந்த மாணவர் தனது அறையில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் பெற்றோர் அறையில் சென்று பார்த்த போது அந்த மாணவரை காணாமல் திடுக்கிட்டனர்.
பல இடங்களில் தேடியும் மாணவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. பின்னர் அவரது புகைப்படத்தை வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மாணவர் மாயமானது குறித்த தகவல் பரப்பினர். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசிலும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.
கோவிலில் மீட்பு
இந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த மாணவரின் புகைப்படத்தை பார்த்த ஒருவர் கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள சாய்பாபா கோவிலில் உள்ள சிறுவனை போல் இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதனை அறிந்த பெற்றோரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த மாணவர் சாய்பாபா கோவிலில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது அவர் தனது பெற்றோர் அடிக்கடி படிக்குமாறு வற்புறுத்தியதால் சாய்பாபா கோவிலுக்கு சென்று இறைவா, என்னை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விடு என்று வேண்டி தியானத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.