தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரியுங்கள் - கனிமொழி எம்.பி
தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரியுங்கள் என கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வந்தார். அவர் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற வரும் 2024-ம் மக்களவை தேர்தல் பிரதமர் வேட்பாளர் குறித்து தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம் அதற்கு காரணம் திமுக தான்.
காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம்.இரு முறை பிரதமர்களை தவறவிட காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்க உறுதி எடுப்போம்.
வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.