லாரியில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் இருந்து லாரியில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இருந்து லாரியில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி மற்றும் போலீசார், நேற்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சூளகிரி பெட்ரோல் பங்க் அருகே நின்ற லாரியில் அவர்கள் சோதனை செய்தனர்.

பெண் கைது

அதில், 50 கிலோ அளவிலான 183 மூட்டைகளில் 9 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூரை சேர்ந்த ஜெயந்தி (வயது48) என்பவர் ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயந்தியை கைது செய்தனர்.

மேலும் லாரியுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்த குபேந்திரன் (25) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story