சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்:தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைஈரோடு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்:தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கட்டிட தொழிலாளி

கோபி அருகே உள்ள கூகலூர் கொன்னமடை வீதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மகன் குமார் (வயது 26). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆனவர். குடும்ப பிரச்சினை காரணமாக குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக குமாருக்கு, அவர் வேலை பார்த்து வந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் தனது வீட்டின் அருகே குடிசை அமைத்து அதில் அவரை தங்க வைத்திருந்தார்.

அந்த கட்டிட ஒப்பந்ததாரருக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உள்ளார். அந்த சிறுமியிடம் குமார் நட்பாக பழகி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்காக சிறுமி, மொடக்குறிச்சி அருகே உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றார். இதற்கிடையில் சிறுமியின் செல்போன் எண்ணில் குமார் தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இதை நம்பி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி இரவு சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, குமார் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கிருந்து பஸ்சில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலா கிராமத்துக்கு சிறுமியை அழைத்து சென்றார்.

அங்கு ஒரு வீட்டில் வைத்து குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

போக்சோவில் கைது

இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நின்றிருந்த மாயமான சிறுமியையும், குமாரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமார், சிறுமியை கடத்தி சென்று, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து குமார் மீது போக்சோ, கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

20 ஆண்டு சிறை

இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், குமாருக்கு, சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதமாக ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண உதவியாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி மாலதி, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


Next Story