குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்த பெண் கைது ராசிபுரத்தில் பரபரப்பு
ராசிபுரத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம்:
ராசிபுரத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
மயக்க மருந்து
ராசிபுரம் டவுன் செம்மலை படையாச்சி தெரு பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 82). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பாப்பம்மாள் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் குடியிருந்தார். தற்போது அவர் நாமக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந் தேதி மல்லிகா ராசிபுரத்தில் உள்ள பாப்பம்மாளை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மல்லிகா மூதாட்டி பாப்பம்மாளுக்கு கொடுத்தார். அதை குடித்த பாப்பம்மாள் மயக்கம் அடைந்தார்.
இதை பயன்படுத்தி மல்லிகா, பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு அதற்கு பதிலாக அவர் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை மூதாட்டிக்கு அணிவித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மல்லிகா நடந்து சென்ற காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
கைது
இந்த நிலையில் மறுநாள் காலை வரை வீடு திறக்கப்படாததால் பாப்பம்மாளின் உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் மயங்கி கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் மயக்கம் தெளிந்த பாப்பம்மாள் தன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி தங்கம் இல்லை என்பதும் அது கவரிங் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து பாப்பம்மாளின் மகனும் ஓய்வு பெற்ற போலீஸ்காரருமான சுந்தரராஜன் கடந்த 11-ந் தேதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், புகாரின் அடிப்படையிலும் நாமக்கல் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி மல்லிகாவை (60) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 4 பவுன் தங்க சங்கலியை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட மல்லிகாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.